அகில இந்திய அளவில் உயர்கல்வி குறித்த கணக்கெடுப்பு (ஏ.ஐ.எஸ்.எச்.இ.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018-2019-ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த கணக்கெடுப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், 2018-2019-ம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது.
அதில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்கள், அங்கு எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள்?, எத்தனை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன?, பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியில் சேரும் மொத்த மாணவர்களின் சதவீதம் எவ்வளவு?, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எவ்வளவு ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்? போன்றவை குறித்த கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
நாடு முழுவதும் 962 பல்கலைக்கழகங்கள், 38 ஆயிரத்து 179 கல்லூரிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள (2018-2019 கணக்கெடுப்பின்படி) 59 பல்கலைக்கழகங்கள், 2 ஆயிரத்து 466 கல்லூரிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. மாநில அளவில் கல்லூரிகள் அதிகம் இருக்கும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 6-வது இடத்தில் இருக்கிறது.
அதன்படி, பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் (18 வயது முதல் 23 வயது உடையவர்கள்) மொத்த விகிதத்தை (கிராஸ் என்ரோல்மென்ட் ரேசியோ) பார்க்கும்போது, இந்தியாவில் 26.3 சதவீதம் மாணவர் சேர்க்கை இருக்கிறது. அகில இந்திய அளவில் தமிழ்நாடு 49 சதவீதத்துடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இதில் முதலிடத்தில் சிக்கிமும், 2-வது இடத்தில் சண்டிகாரும் உள்ளன.
கடந்த 8 ஆண்டுகளின் புள்ளி விவரங்களை பார்க்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் பள்ளி படிப்பை நிறைவு செய்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் மொத்த விகிதம் 41 சதவீதமாக இருக்கிறது. அதோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகத்தில் மொத்த மாணவர்களின் விகிதம் 49 சதவீதம் ஆக உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவைவிட தமிழகத்தில் உயர்கல்வியில் அதிக மாணவர்கள் சேர்ந்து படிப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
தமிழகத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் பலனாக தான் இதை பார்க்க முடிகிறது. 2019-2020-ம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் வெளியானால், தமிழகத்தில் உயர்கல்வியை படிக்கும் மாணவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியையும் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment