ஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்மாணவர்களை இடங்கள் நிரம்பியதாக கூறி, வெளியேற்ற கூடாதென பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.அதே நேரம், இந்த நல்ல வாய்ப்பை தக்க வைக்க, பள்ளிகளில் கூடுதல் வகுப்பு பிரிவுகள் துவக்குவதற்கான அனுமதியை, பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தித்தர வேண்டும்.அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம் இல்லை. 14 வகையான நலத்திட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அனு பவமிக்க ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.இருப்பினும், கட்டமைப்பு வசதியின்மை உள்ளிட்ட, சில காரணங்களால், கடந்த ஐந்து ஆண்டுகளாக சேர்க்கை சரிந்து வந்தது. மாணவர்களே சேராத பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இச்சூழலால், பணிவாய்ப்பு கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டது.வந்தது புது மாற்றம்!ஊரடங்கு காரணமாக, மீண்டும் அரசுப்பள்ளிகளை தேடி வரும், பெற்றோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வசதியில்லாதோரின் கவனம், அரசுப்பள்ளிகளின் பக்கம் திரும்பியுள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.இருப்பினும் குறிப்பிட்ட சில பள்ளிகளில் சேரவே, பெற்றோர் ஆர்வம் காட்டுவதால், சேர்க்கை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேர்க்கை முடிந்தாலும், இக்குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வேல்ராஜ் கூறியதாவது:அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவு உள்ளதோடு, ஸ்மார்ட் வகுப்பறை, யோகா, கலைப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு மாறி வருகிறது.
அனுபவமிக்க ஆசிரியர்கள் பணியில் உள்ளோம்.அரசுப்பள்ளிகளை தேடி வரும் குழந்தைகளை தக்க வைத்தால் தான், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். உபரி ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படும் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.அரசுப்பள்ளிகளை தேடி வரும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, கல்வித்துறை முனைப்பு காட்ட வேண்டியது அவசியம். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்போது தான், இனிவரும் காலங்களிலும், இந்த நல்ல மாற்றம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இந்த நிலைமையை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் கற்பிக்க வேண்டும்.
தேவைப்படும் பள்ளிகளில், அதிக மாணவர்களை சேர்க்க வசதியாக, கூடுதல் வகுப்பு பிரிவுகள் துவக்குவதற்கான அனுமதியை, பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும்.'அட்மிஷன் வழங்க மறுக்கக்கூடாது'மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ''கடந்த 17ம் தேதி முதல், 19ம் தேதி வரை, அரசுப்பள்ளிகளில் 11 ஆயிரத்து 386 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆயிரத்து 300 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
சேர்க்கை முடிந்தாலும், அரசுப்பள்ளியை தேடி வரும் குழந்தைகளை, அருகாமையில் உள்ள வேறு அரசுப்பள்ளியில் சேர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளை தேடி வரும் மாணவர்களுக்கு, எக்காரணம் கொண்டும், 'அட்மிஷன்' மறுக்கப்படாது,'' என்றார்.
No comments:
Post a Comment