தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே.
தூக்கமின்மையால் அவதியுறுகின்றீர்களா? தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புறண்டு படுத்து தவிக்கின்றீர்களா? நாட்டில் பாதி பேர் இப்படித்தான் சரியான தூக்கம் இன்மையால், ஆழ்ந்த தூக்கமின்மையால் அவதியுறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், மன அழுத்தம் சேரும் போது பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிவிடுகிறது.
பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 7-8 மணி நேரம் தூங்கும் போது உடல் மற்றும் மனநலம் மேம்படுகிறது. ஆரோக்கியமான, தரமான வாழ்க்கை நிலைக்கான சூழல் ஏற்படுகிறது.
தூக்கமின்மையால் அவதியுறுபவர்களுக்கு ஒரே நாளில் சரியான நேரத்துக்கு தூக்கத்தைக் கொண்டுவந்துவிட முடியாது.
அதை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்க முடியும்.
தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள் மட்டுமல்ல, சரியான, தரமான, ஆழ்ந்த தூக்கம் வேண்டும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே காண்போம்.
1. தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு படுக்கைக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். இரவு 9 மணிக்கு தூங்கச் செல்வது என்று முடிவெடுத்துவிட்டால், தினமும் தவறாமல் 9 மணிக்கு எல்லாம் படுக்கைக்கு வந்துவிட வேண்டும்.
2. பிற்பகலில் தூக்கம் தவிர்க்கலாம். மதியம் தூங்கினால்தான் புத்துணர்வாக இருக்கும் என்று கருதுபவர்கள் 20 நிமிடத்துக்கு மேல் தூங்க வேண்டாம். பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தூங்கவே வேண்டாம்.
3. தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள் மது, காஃபின் என்ற ரசாயனம் உள்ள பானங்கள், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
4. தூங்கச் செல்வதற்கு முன்பு ஒன்று – இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தால் அடித்துப் போட்டது போல ஆழ்ந்த தூக்கம் வரும்.
5. இரவு 7 மணிக்குள்ளாக இரவு உணவை முடித்துவிடுங்கள். அதன் பிறகு பசித்தால் தூங்கச் செல்வதற்கு முன்பு பால், வாழை பழம், பாதாம், வால்நட் போன்றவற்றை சிறிது எடுத்துக் கொள்ளலாம்.
6. படுக்கை அறை வெளிச்சம் இன்றி, அமைதியாக, தூங்க சௌகரியமானதாக இருக்கட்டும்.
7. இரவு 9 மணிக்கு தூங்கச் செல்வதாக இருந்தால் 8.59 வரை தொலைக்காட்சி பார்ப்பது, இசை கேட்பது என்று இருக்க வேண்டாம். குறைந்தது ஏழு மணிக்கு எல்லாம் தொலைக்காட்சியை நிறுத்திவிடுவது நல்லது.
8. படுக்கச் சென்ற 20 நிமிடத்துக்குள் தூக்கம் வர வேண்டும். வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டாம். அப்படி ஒரு சூழல் வந்தால் மனதை அமைதிப்படுத்தப் பாடல் கேட்கலாம், புத்தகம் படிக்கலாம். மனதை அமைதிப்படுத்தித் தூங்கும் சூழலை உருவாக்கிய பிறகு தூங்கச் செல்லலாம்.
அனைத்துக்கும் மேலாக தூக்க மாத்திரையைத் தவிர்ப்பது நல்லது. என்ன செய்தாலும் தூக்கமே வரவில்லை என்று அவதியுறுபவர்கள் டாக்டர் பரிந்துரைத்தால் மட்டும் மாத்திரை எடுக்கலாம். அதுவும் தொடர்ந்து எடுக்கக் கூடாது.
No comments:
Post a Comment